×

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - ஆட்சியர் சாந்தி தகவல்!

 

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பிரிவுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட வரும் 30ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2022ம் ஆண்டு சேர்க்கைக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கான (SPOT ADMISSION) 30.08.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றனது. இந்த நேரடி சேர்க்கை 30.09.2022 வரை நடைபெறவுள்ளது.

வயது வரம்பு : 

14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. உச்ச வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி : 

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு  : கம்பியாள்(Wireman) (2 வருடம்). பற்றவைப்பவர் (Welder) (1 வருடம்)

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்  : கம்பியூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1 வருடம்), கட்டடபட வரைவாளர் (2 வருடம்), மின் பணியாளர் (2 வருடம்), பொருத்துநர் (2 வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2 வருடம்), கம்மியர் டீசல் என்ஜின் ( 1 வருடம்), கடைசலர் (2 வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2 வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2022ல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம்.

எனவே தகுதியுள்ள இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் மற்றும் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாதவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு பயனடையுமாறு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார். சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 9688675686, 9787440280, 9688237443 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.