×

கோவையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 

கோவையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அதிமுக சார்பில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை வகித்ததார். இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், கே.ஆர். ஜெயராம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அதிமுக ஆட்சியை வீழ்த்தி திமுக குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைத்ததாகவும், ஆனால் தானும், தங்கமணி, சண்முகம் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அதிமுக ஆட்சியை காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.  அதனால் தன் மீது ஸ்டாலினுக்கு கோபம் எனவும், அதனாலேயே தன்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் தாங்கள் கவலை படமாட்டோம் என கூறிய அவர், தங்களுக்கு துணையாக எப்போதும் தொண்டர்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடிய ஸ்டாலின், தற்போது அவரது ஆட்சியில் திருப்பூரில் பெண்களுக்கு என்று தனி பாரே தொடங்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.