×

சரவணம்பட்டியில் அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுமாடு - பொதுமக்கள் அச்சம்!

 

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளுக்குள் உலாவிய காட்டுமாட்டை, வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட்டனர். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய காட்டு மாடு ஓன்று, விளாங்குறிச்சி வழியாக விநாயகபுரத்துக்கு வந்தது. அங்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுமாடு வாகனச் சத்தத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதனை கண்டு அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த மாட்டை விரட்டினர். அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த காட்டு மாடு, பின்னர் அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் விரட்டியதால் அந்த மாடு சரவணம்பட்டி முருகன் நகர் பகுதிக்குள் புகுந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளர் செந்தில், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அதிகாலை 3 மணி அளவில் காட்டுமாட்டை பத்திரமாக பிடித்தனர். பின்னர் வனத்துறை வாகனம் மூலம் பிடிபட்ட காட்டுமாடு கொண்டுசெல்லப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு மாடு புகுந்த சம்பவம் காரணமாக சரவணம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.