×

காவேரிப்பட்டணம் அருகே மலைப்பாம்பு இறுக்கியதில் பாம்பு பிடி வீரர் பலி... கிணற்றில் இறங்கி மீட்க சென்றபோது சோகம்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மலைப்பாம்பை மீட்க சென்ற பாம்புபிடி வீரர், அந்த மலைப்பாம்பு இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்லு குட்டபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. இவரது 50 அடி ஆழ கிணற்றில், 1 வாரத்துக்கு முன்பாக மலைப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது. அந்த மலைப்பாம்பை வெளியே எடுக்க, பனகமுட்லு பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரரான நடராஜ்(60) என்பவர் நேற்று கிணற்றில் இறங்கி உள்ளார். பின்னர் மலைப்பாம்பை பிடித்து, கிணற்றின் பாதி தூரம் வரை தூக்கிவந்துள்ளார். அப்போது, மலைப்பாம்பு திடீரென அவரை இறுக்கியதால், நடராஜ் பாம்புடன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். மேலும், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து  கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்ட நடராஜை மீட்க முயன்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும், கிணற்றுக்குள் பதுங்கிக்கொண்ட மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.