×

பெருந்துறையில் பைக்கில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது... 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 

பெருந்துறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெருந்துறை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த நபா் பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (47) என்பதும், இவர் வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதை அடுத்து, செல்வத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.