×

அரச்சலூர் அருகே காரில் ரேஷன்அரிசி கடத்திய நபர் கைது... 800 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்!

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே காரில் ரேஷன் அரிசியை கடத்திய நபரை கைதுசெய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், அவர்களிடம இருந்றது 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மாருதி காரை சந்தேகத்தின் பேரில் போலிசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக கார் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை  மேற்கொண்டனர். அதில் அவர் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பதும், அவர் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன்அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயனை கைது செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.