×

பண்ணாரியம்மன் கோவில் அருகே ஒற்றை யானை தாக்கி லாரி ஓட்டுநர் பலி!

 

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை தாக்கி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). லாரி ஓட்டுநரான இவர் நேற்று கோவைக்கு சரக்குகளை ஏற்றிச்சென்றுவிட்டு மீண்டும் கர்நாடகாவுக்கு திரும்பி கொண்டிருந்தார். சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நேற்றிரவு பண்ணாரியம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். அவரை போலவே ஏரளமான ஒட்டுநர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் உலாவியது. இதனை கண்டு அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.  

அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த காட்டுயானை அவர்களை நோக்கி ஓடி வந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் தப்பியோடினர். ஆனால் எதிர்பாராத விதமாக சீனிவாசன் ஒற்றை யானையிடம் சிக்கிக் கொண்டார். அப்போது, காட்டுயானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த லாரி ஓட்டுநர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண் முன்னே லாரி ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.