×

திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற சிறுத்தை... வாகன ஓட்டிகள் அச்சம்!

 

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சிறுத்தை உலாவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பகத்தில் தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் உடைய இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையிலான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உணவு, குடிநீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள 24-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, திடீரென சாலையை கடந்து மறுபுறம் உள்ள தடுப்புக்கட்டையின் மீது ஏறி அமர்ந்து கொண்டது. அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்த அந்த சிறுத்தை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

அப்போது, அந்த வழியாக தாளவாடி நோக்கி சென்ற வாகன ஓட்டிகள், சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மலைப்பாதையில் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.