×

தக்கலையில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் மீது சரமாரி தாக்குதல்... சிசிடிவி காட்சி அடிப்படையில் இருவர் கைது!

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சாலையில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளியை தாக்கிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ். கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தக்கலையில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வந்த 3 பேர் டென்னிசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த  போதை இளைஞர்கள் டென்னிஸை கல்லை கொண்டு தாக்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த டென்னிஸ் அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கினர். அப்போது, அவர் கையெடுத்து கும்பிட்டும் போதை ஆசாமிகள் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த டென்னிஸை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்த சிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், டென்னிஸை தாக்கியதாக தக்கலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(31) மற்றும் முத்தலக்குறிச்சியை சேர்ந்த தாணுமூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.