×

கோவையில் வீட்டில் பதுக்கிவைத்த 4 அடி உயர ஐம்பொன் சிலை பறிமுதல்!

 

கோவை உக்கடம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 அடி உயர ஐம்பொன் முருகன் சிலையை, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை பதுக்கி வைத்திருப்பதாக, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசார், அவரது வீட்டிற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின்போது, வீட்டில் சுமார் 4 அடி உயரமுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அந்த சிலையை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பாஸ்கரன் சுவாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலை தானே செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவையும் போலீசாரிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் சிலையின் பழமை தன்மை குறித்தும், அதன் விபரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.