×

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த பெற்றோர்... விரக்தியில் உயிரை மாய்த்த 10ஆம் வகுப்பு மாணவி!

 

ஈரோட்டில் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததாக பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியில் வசித்து வருபவர் பஷீர் அகமது. கூலி தொழிலாளி. இவரது மகள் ஷபீனா (16). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளி காலாண்டு தேர்வினில் ஷபீனா குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் அவரை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறி உள்ளனர். மேலும், தனக்கு சரிவர படிப்பு வரவில்லை என  ஷபீனா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவர் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதை கண்டு பெற்றோர் விசாரித்தபோது தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதை ஷபீனா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை பஷீர் அகமது அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.