×

மதுரையில் சரக்கு வேனில் கடத்திவந்த 951 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

 

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 951 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 நபர்களை கைது செய்தனர.

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கோச்சடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, வேனில் மூட்டைகளுக்கு இடையே பண்டல் பண்டலாக ஏராளமான கஞ்சாவை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 951 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தியது தொடர்பாக கோவை பீளமேட்டை சேர்ந்த செந்தில் பிரபு(36), மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த பிரபாகரன்(33) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து, மதுரையில் பதுக்கிவைத்து, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிருந்தது தெரியவந்தது.  இதனை அடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் தொடர்புடைய ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.