×

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இடையன் குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். விவசாயி. இவரது மகள் சந்தியா(14). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்த நிலையில், மாணவி அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை குடும்பத்தினர் கண்டித்து படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

எனினும் பெற்றோர் திட்டியதால், சந்தியா யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சந்தியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின் வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்த கமுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை சுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில், கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.