×

கழிவுநீர் கால்வாயில் விஷவாயு தாக்கி 7ஆம் வகுப்பு மாணவர் பலி... கோவையில் சோகம்!

 

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் விஷவாயு தாக்கி நாமக்கல்லை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் விக்னேஷ்(13). இவர் நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாலன், தனது உறவினர்களுடன் கோவை உக்கடம் பகுதியில் தங்கி, அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தந்தை உதவியாக கடந்த சில நாட்களுக்கு முன் விக்னேஷ் கோவைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, நேற்று தனது உறவினர்களுடன் சேர்ந்து வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மண்ணை அள்ளி, அதிலிருந்து தங்க துகள்களை சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கழிவுநீர் கால்வாயில் இருந்து விக்னேஷை விஷ வாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், விக்னேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகைப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கழிவுநீர் கால்வாயில் கலந்ததால் ஏற்பட்ட நச்சு வாயுவை சுவாசித்தபோது சிறுவன் விக்னேஷ் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.