×

டாப்சிலிப் முகாமில் உடல் குறைவால் 71 வயது பெண் யானை உயிரிழப்பு!

 

பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமி என்ற 71 வயது பெண் யானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் விஜயலட்சுமி என்ற 71 வயதான பெண் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை கடந்த 1973ஆம் ஆண்டு பானத்தியாறு பகுதியில் மீட்கப்பட்டு, முகாமில் சேர்க்கப்பட்டது. வனப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்த யானை, முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பணியிலும் ஈடுபடாமல், முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக யானை உணவு உட்கொள்ளாமலும், மேய்ச்சல் சரியாக இல்லாமலும் இருந்து வந்தது. இதனை அடுத்து, வனக்கால்நடை டாக்டர் சுகுமார், ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் மனோகரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து, விஜயலட்சுமி யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, வனக்கால்நடை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பெண் யானை விஜயலட்சுமி நேற்று மதியம் 2.15 மணியளவில் உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் பொள்ளாச்சி  ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு தகவல் அளித்தனர். அவரது அறிவுறுத்தலின் படி, உயிரிழந்த பெண் யானை விஜயலட்சுமிக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.