×

ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கடத்திச்சென்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 7 பேர் கைது!

 

ஆந்திராவில் இருந்து நாமக்கல் மற்றும் குமாரபாளையம் வழியாக காரில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர். 

நாமக்கல் அருகே முதலமைப்பட்டி பகுதியில் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் நோக்கி சென்ற சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்திச்சென்று பிடித்து, காரில் சோதனையிட்டனர். அப்போது, காரில் பொட்டலங்களில் மறைத்து கஞ்சாவை கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சுமார் 200 பொட்டலங்களில் இருந்த 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காரில் இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தேனியை சேர்ந்த முருகன், ஜெயசந்திரன் மற்றும் மகேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து காஞ்சாவை வாங்கி வந்து தேனிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி சென்ற 2 கார்களை பிடித்து சோதனையிட்டபோது, அதில் 100 கிலோ கஞ்சா கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த முருகன், அப்துல் ஜலீல், முஜிதீப் ரகுமான், சுல்தான் ஆகிய 4 பேரை கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, இரு சம்பவங்களில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.

பிடிபட்ட கஞ்சாவை, நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான நபர்கள் அளித்த தகவலின் பேரில், தற்போது கஞ்சாவை கடத்திய 7 பேரை கைது செய்துள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார்.