×

கடையநல்லூரில் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேர் கைது!

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் வாடகை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வாடகை வீட்டில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் பொன்னரசு, அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், விஜயகுமார் மற்றும் போலீசார், கடையநல்லூர் பருத்தி விளை பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரோஜா என்பவரது லைன் வீட்டில் சோதனையிட்டபோது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கதவை தட்டியும் திறாக்காததால் போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.

அப்போது, அறையின் உள்ளே பயங்கர ஆயுதங்களுடன் 6 நபர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள்  சேரன்மகாதேவி சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி(எ) ஆறு(27), நெட்டூரை சேர்ந்த சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன், மேலசெவலை சேர்ந்த லட்சுமணகாந்தன் (எ) கருப்பசாமி, ஊத்துமலையை சேர்ந்த மாரிமுத்து, அய்யனார்குளத்தை சேர்ந்த சகோதரர்கள் சூர்யா, சத்யா என்பது தெரியவந்து. மேலும், குற்றம் செய்யும் நோக்கத்துடன் அவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, 6 பேர் மீதும் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைதான நெட்டூர் கண்ணன் மற்றும்  முப்புடாதி மீது மட்டும் நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 48 வழக்கும், மற்ற 4 பேர் மீதும் 40 வழக்குகளும் என மொத்தம் 88 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.