×

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா பறிமுதல் ; 6 பேர் கைது!

 

நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தமுயன்ற 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை புத்தூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அந்த வழியாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு லோடு வேனை மறித்து சோதனை நடத்தினர். அப்போது,  லோடு வேனில்தவிடு மூட்டைகளுக்கு அடியில் ஏராளமான கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, தலா 2 கிலோ எடையிலான 250 பொட்டலங்களில் இருந்த 500 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கார்களில் இருந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் தேனியை சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன், திருவாரூரை சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த உமாபதி என தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து நாகை துறைமுகத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து, படகு மூலம் இலங்கைக்கு அதனை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, நாகை டவுன் போலீசார் கஞ்சா கடத்திய 5 பேர் மற்றும் படகு உரிமையாளர் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிங்கார வேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களை நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.