×

இலங்கைக்கு கடத்த முயன்ற 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்... வனத்துறையினர் நடவடிக்கை!

 

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் உத்தரவின் பேரில் வனவர் அருண் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர், வேதாளை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையை ஒட்டிய தனியார் தோட்டத்தில் ஏராளமான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அங்கிருந்த 480 கிலோ அளவிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அதனை மண்டபம் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும் மேலும், கடல் அட்டைகள் கடத்தல் தெடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.