×

ஈரோட்டில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்!

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 41 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில்  15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள் உள்ளனர்.

சிறுவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 15 முதல் 18 வயதுடைய 41 ஆயிரம்  சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று 4-வது நாளாக தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.