×

ஈரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது!

 

ஈரோட்டில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 4 பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாநகரில் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கு பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரத்தில், 7 ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1.32 கோடியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, வங்கி நிர்வாகத்தினர் ஈரோடு எஸ்பி.,யிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மகும்பலை தேடி வந்தனர். இதற்கிடையில், ஈரோடு ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை போலவே, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கடந்த மாதம் 17ஆம் தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் மர்மகும்பல் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. 

இதுகுறித்து, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன் (25), ஜெகதீஸ் (27), முகமது ரியாஸ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான பூபாலன், ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், இதன் மூலம் அவரது கூட்டாளிகளுடன் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. 

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஈரோடு ஏடிஎம்.,களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பூபாலனின் கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27), ஆண்டிகாட்டை சேர்ந்த கேசவன் (24), வெடியரசம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (24), திருச்செங்கோட்டை சேர்ந்த குமார் (27) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.