×

ஈரோட்டில் 3-வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்... பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து ஆதரவு!

 

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல்,  தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட என 1,800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பணிகளை அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவெடுத்து உள்ளது. இதனை கண்டித்து நேற்று ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக  மாநகர் பகுதியில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. போராட்டத்தின்போது முக்கிய பிரமுகர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மேயர் நாகரத்தினத்தை சந்தித்து பேசியபோதும், சமூக முடிவு ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக காலை 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 3-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் குறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறும்போது, 'நான் தினக் கூலி அடிப்படையில் ரூ.700 சம்பளம் வாங்கி வந்தேன். தனியாருக்கு கொடுக்கும் முடிவால் தனது சம்பளம் பாதியாக குறைந்து ரூ.350 மட்டுமே வர வாய்ப்புள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் 152 அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியாளர், துப்புரவு மேற்பரையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தின கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை இன்று காலை பாஜக சார்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், சட்டமன்றத்தில் இது பற்றி பேசுவதாகவும் உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, எஸ்சி அணி விநாயகமூர்த்தி, நெசவாளரணி ஜெகநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட பொது செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

இதனிடையே, ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஈரோடு மாநகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மாநகர் பகுதியில் நால் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேரும். அதனை அந்தந்த மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரிப்பார்கள். ஆனால் இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெறாததால் 140 டன் குப்பைகள் வரை குவிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.