×

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 392 மனுக்கள் பெறப்பட்டன!

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 392 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்ற நிலையில், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் திவ்ய தர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை வசதி, வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

இதன்படி, நேற்று ஒரே நாளில் 392 மனுக்கள் வரப்பெற்ற நிலையில், அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு ஆட்சியர் திவ்ய தர்ஷினி உத்தரவிட்டார். தொடர்ந்து, காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த மிட்டாரெட்டி அள்ளி அடுத்த அப்பனஅள்ளி கோம்பையை சேர்ந்த எருக்கன்பின்டி என்ற மாற்றுத்திறனாளிக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.7,500 மதிப்பிலான காதொலி கருவியை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

இதேபோல், குட்டையில் மூழ்கி உயிரிழந்த தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அனுஷ்கா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவரது வெற்றோர் செந்தில் - கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி இயக்குநர்(ஊராட்சி) சீனிவாச சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.