×

கிருஷ்ணகிரி நகருக்கு அருகே முகாமிட்டுள்ள 3 காட்டுயானைகள்... வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு!

 

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகே முகாமிட்டு உள்ள 3 காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பனமுட்லு வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு வெளியேறிய 3 காட்டு யானைகள், பிக்கனப்பள்ளி, மேலுமலை வழியாக பயணித்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்தன. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் யானைகளை வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று சிப்காட் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த யானைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பையப்பள்ளி கிராமத்தின் வழியாக ஜாகிர் மேட்டூர் பகுதிக்கு வந்துள்ளன.

மேலும், நேற்று முழுவதும் அங்குள்ள மாந்தோப்பில் யானைகள் முகாமிட்டு இருந்தன. தகவல் அறிந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்திடாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.