×

கடையம் அருகே கரடி தாக்கி 3 பேர் படுகாயம் - வனத்துறையினர் விசாரணை!

 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை கடையம் அடுத்த பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அதே பகுதியை வியாபாரி வைகுண்டமணி இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிச் சென்றுள்ளார். இதனை கண்ட கரடி அந்த வியாபாரியை தாக்கி கடித்து குதறியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்டோர் கரடியிடம் இருந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது, அவர்களையும் கரடி தாக்கியது. பின்னர் அந்த கரடி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இந்த சம்பவத்தில் வியாபாரி உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசார் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கரடி தாக்கி 3 பேர் படுகாயமடைந்ததால் அச்சமடைந்துள்ள பெற்றான்பிள்ளை குடியிருப்பு வாசிகள், கரடிகள் கிராமத்திற்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.