×

கோபி அருகே மினிலாரியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது : 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதியில் மினி லாரியில் சட்டவிரோதமாக கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது  செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் பேருந்து நிலையம் அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி  லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, மினி லாரியில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக லாரியில் இருந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பவானி காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்த கணேசன் (45), சத்தியமங்கலம் ஏலூரை சேர்ந்த அருளானந்தம் (54) மற்றும் பவானியை சேர்ந்த மோகன்(33) என்பது  தெரியவந்தது.

மேலும், அவர்கள் சத்தியமங்கலத்தில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி, கூடுதல் விலைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மினி லாரியில் இருந்த 1,050 கிலோ ரேஷன்அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், இதுதொடர்பாக 3 பேரையும்  கைதுசெய்தனர்.  தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.