×

பொங்கல் பண்டிகைக்காக ஈரோடு மாவட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படவுள்ளது. இதனையொட்டி, 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமானோர் பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.

மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை ,சென்னை போன்ற ஊர்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இன்று இரவும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஈரோடு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்