×

திருச்சிக்கு காரில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது!

 

ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு காரில் கஞ்சா கடத்திவந்த 6 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் கார் உள்ளிட்ட 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்கேத்திற்கு உரிய விதமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்தவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்த மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நாகராஜ் (20),  வெற்றி என்கிற மிகாவேல் (20), தயாநிதி (22), முகமது அப்துல் ரஹ்மான் (22),  நோபில் என்கிற இக்னேசியஸ் மற்றும் ஹரிஹரன் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள். ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.