×

ஆற்றங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திருசெந்தூரில் மீட்பு!

 

நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசலில் கடத்திச்செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தையை திருசெந்தூர் பகுதியில் மீட்ட போலீசார், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லுர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி நாகூர் மீரா. இவர்களுக்கு முகமது சபிக்(7) என்ற மகனும், 2 வயதில் நிஜிலா பாத்திமா என்ற மகளும் உள்ளனர். சாகுல் ஹமீது, கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள  ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு, பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.  தொடர்ந்து, அன்று இரவு குடும்பத்துடன் பள்ளிவாசல் வளாகத்தில் படுத்து தூங்கி உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை நிஜிலா பாத்திமாவை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சாகுல் ஹமீது மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் குழந்தையை தேடி பார்த்துள்ளார். ஆனால் குழந்தை கிடைக்காததால், இதுகுறித்து சாகுல்ஹமீது கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து கூடன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குழந்தையை கடத்திச்சென்ற நபரை 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அழுது கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு விசாரித்தபோது, அந்த குழந்தை ஆற்றங்கரை பள்ளிவாசலில் கடத்திச்செல்லப்பட்ட நிஜிலா பாத்திமா என்பது தெரியவந்தது.

இது குறித்து கூடன்குளம் போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திருச்செந்தூர் காவல் நிலையம் சென்ற சாகுல் ஹமீது, அவரது மனைவி நாகூர் மீராவிடம் குழந்தை நிஜிலா பாத்திமா ஒப்படைக்கப்பட்டார். குழந்தை திரும்ப கிடைத்ததால் தம்பதியினர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.  குழந்தையை கடத்திய நபர்கள் குறித்து கூடன்குளம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.