×

ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உள்பட 2 போலீசார் வீடுகளில் 63 பவுன் நகை கொள்ளை... குனுயமுத்தூர் அருகே துணிகரம்!

 

கோவை அருகே ஒய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் மற்றும் தலைமை காவலர் வீடுகளின் பூட்டை உடைத்து 63 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கபிலன் பிரேம்குமார். ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஓய்வுபெற்ற தலைமை காவலர் ஜான் சேவியர். நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்காக பிரேம்குமார், சேவியர் உடன் தேவாலயத்திற்கு புறப்பட்டு சென்றார்.  புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து அதிகாலை 2 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, இருவரது வீட்டின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கபிலன் பிரேம்குமார், உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அவரது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, 35 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதேபோல், தலைமை காவலர்  ஜான் சேவியரின் வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.