×

அரியலூர் பெண்ணிடம் இணையதளம் மூலம் ரூ.2.13 லட்சம் மோசடி... டெல்லியை சேர்ந்த இருவர் கைது!

 

அரியலூரில் குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் இணையதளம் மூலம் ரூ.2.13 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி(45). சமீபத்தில் இவருக்கு செல்போனில் பேசிய மர்மநபர்கள் குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி லட்சுமி பல தவணைகளாக ரூ.2,13,700 பணத்தை  கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி லோன் வாங்கி தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி இதுகுறித்து அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா, ஏடிஎஸ்பி ரவிசேகரன் (இணைய குற்றப்பிரிவு) ஆகியோரது வழிகாட்டுதலின் படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று, அம்மாநில போலீசார் உதவியுடன் பண மோசடியில் ஈடுபட்ட சதிஷ்குமார் (30), ஆனந்தன் (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 மடிக்கணினி, 7 செல்போன்கள் மற்றும் ரூ.1,25,000 பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்குகளை முடக்கிய போலீசார், 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.