×

நாகர்கோவிலில் இருந்து ரயிலில் கடத்தமுயன்ற ரூ.2 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் - 6 பேர் கைது!

 

நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலம் மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர் இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலில் திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக, வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் வனத்துறையினர் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று,அங்கு நின்ற மும்பை விரைவு ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர், அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, அதில் சுமார் 2 கிலோ அளவிலான திமிங்கல எச்சம் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இதுதொடர்பாக அந்த இளைஞரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை அடுத்த தோமையார்புரத்தை சேர்ந்த தினகரன்(27) என்பது தெரிய வந்தது.

மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் திமிங்கல எச்சம் கடத்தலில் தொடர்புடைய, அருண் (27), சதீஷ்(35), திலீப்குமார்(36), மகேஷ்(42) மற்றும் தங்கராஜ் (49) ஆகியோரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, திமிங்கல எச்சம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.