×

ஈரோடு வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது!

 

ஈரோடு வழியாக கேரளாவுக்கு சென்ற அலப்புழா விரைவு ரயில் கஞ்சா கடத்திச்சென்ற இளைஞரை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், ஈரோடு ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளர் கணேஷ் தலைமையில், காவலர்கள் ராஜலிங்கம், சௌந்தரராஜ், சுஜித்கான் ஆகியோர் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் பொருட்களை தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொதுப்பிரிவு பெட்டியில் பயணிகள் இருக்கையின் அடியில் கேப்பாராற்ற நிலையில் வெள்ளை நிற பை ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் சுமார் 11.50 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது, அது தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அப்போது ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை ஈரோடு ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த இளைஞர் மதுரை மாவட்டம் கக்குடி அடுத்த கல்மேடு சக்திமங்களம், களஞ்சியம் நகரை  சேர்ந்த தென்னரசு (20) என தெரிய வந்தது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து,  ஈரோடு ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தென்னரசுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.