×

10 வயது சிறுமி தீவைத்து எரிப்பு... தந்தை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 

பணகுடி அருகே பேக்கரியில் திருடியதாக 10 வயது சிறுமியை தந்தை தீவைத்து எரித்த தந்தையின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த காவல்கிணறு பாரதி நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், 2-வதாக ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த சுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுஜாவுக்கு, முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.  தம்பதியினர் இருவரும் காவல்கிணறு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், குழந்தைகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சிறுமி மகேஸ்வரி, காவல் கிணறு பகுதியில் உள்ள பேக்கரி கடையில் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை ஊழியர்கள், தந்தை அந்தோணிராஜுடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், சிறுமி மகேஸ்வரியை வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து உள்ளார். உடலில் தீப்பற்றியதால் சிறுமி  அலறி துடித்தபடி, காப்பற்றக்கூறி தந்தை அந்தோணிராஜை கட்டி பிடித்துள்ளார்.

அவர்களது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமி மகேஸ்வரியை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த அந்தோணிராஜும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சிறுமி மீது தீவைத்த சம்பவம் தொடர்பாக தந்தை அந்தோணிராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.