எதிர்பார்த்துக் காத்திருக்கும் முன்னோருக்குத் திதி கொடுக்க மறந்துவிடாதீர்கள்!
இன்று மகாளய அமாவாசை. முன்னோருக்குத் திதி கொடுக்க வேண்டிய முக்கிய மூன்று முக்கியமான அமாவாசைகளுள் ஒன்று. நம் அளிக்கும் திதிக்காக நம்முடைய முன்னோர் காத்துக்கொண்டிருப்பார்கள். இன்று நாம் அளிக்கும் திதி நேரடியாக எமதர்ம ராஜாவின் கைகளுக்குச் செல்லும். அதை அவர் நம்முடைய முன்னோர்களுக்கு வழங்குவார் என்பது நம்பிக்கை. அப்படி திதியைப் பெற்றுக்கொள்ளும் நம் முன்னோர் நம்முடைய வம்சம் செழித்து வளர ஆசிகளை வழங்குவார்கள்.
நாம் இன்றைக்கு வாழ நம்முடைய முந்தைய தலைமுறையினர்தான் காரணம். அவர்கள் வழியிலின்றி நாம் வந்திருக்கவே முடியாது. சிலர், பெற்றோர் காலமாகியிருந்தால் அவர்களுக்கு மட்டும்தான் திதி கொடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இது உண்மையில்லை, நம்முடைய முந்தைய தலைமுறையினருக்கு இன்றைய நாளில் திதி கொடுக்க வேண்டியது அவசியம்.
நம்முடைய முன்னோர்களுக்கு வழங்க வேண்டிய திதியை வழங்கவில்லை என்றால், அவர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிட வேண்டியிருக்கும். அவர்களின் சாபம் கடவுள் நமக்கு அளிக்கும் வரங்களைக் கூட தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது. பித்ரு தோஷம் காரணமாக பல்வேறு இன்னல்கள் வரும். குடும்பத்தில் தொடர்ந்து துன்பம், தொல்லை, கஷ்டம் என்று இருந்தால் அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கலாம். இன்றைய நாளில் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பதன் மூலம் தோஷத்திலிருந்து விடுதலை பெற முடியும்.
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் ராமேஸ்வரம், காசி எனப் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது பலருக்கும் வழக்கமாக இருக்கும். ஆனால், கொரோனா காலத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புண்ணிய தலங்கள், புண்ணிய நதிக்கரையில்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று இல்லை. நம் வீட்டுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளிலேயே தர்ப்பணம் செய்யலாம். நாம் வழங்கும் தர்ப்பணம் நம்முடைய முன்னோர்க்கு மட்டுமல்ல, யாரும் இல்லாமல், உதவிக்காகக் காத்திருக்கும் ஆன்மாக்களுக்கும் சென்று சேரும். தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக 'ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்ற மந்திரத்தைச் சொல்லச் சொல்வார்கள். 'எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று அர்த்தம். இதன் மூலம் யாருமில்லாத ஆன்மாக்களின் ஆசியும் நமக்குக் கிடைக்கும்.