×

கார்த்திகை சோமவார விரதம்... கடைப்பிடிக்கும் முறை!

 

கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமை தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் விரதம் கார்த்திகை சோமவார விரதம். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். இன்று தொடங்கி ஆண்டு முழுவதும் சிவபெருமானை எண்ணி இந்த விரதத்தை இருப்பது வழக்கம்.

இன்று காலையில் விநாயகரை வணங்கி இந்த சோமவார விரதத்தைத் தொடங்குவது வழக்கம். மஞ்சளில் விநாயகரைப் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்ட வேண்டும்.

ஒரு கலசத்தை எடுத்து மாவிலை வைத்து, நடுவில் மஞ்சள் தடவ வேண்டும். கலசத்தின் மீது தேங்காய் வைத்து அதன் மீது சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூஜையைத் தொடங்க வேண்டும். அரிசிச் சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்துச் சிவ பெருமானுக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்களைச் சொல்ல வேண்டும். முடிவில் தீபாராதனை காட்டி வழிபாட்டை முடிக்க வேண்டும்.

பூஜை முடிந்ததும் வயதான தம்பதியினருக்கு உணவு அளித்து, புது வேட்டி, ரவிக்கைத் துணி, வெற்றிலை ஆகியவற்றைத் தட்டில் வைத்து வழங்கி, அவர்களின் ஆசியைப் பெற வேண்டும்.

இன்று தொடங்கி திங்கட்கிழமைகள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். முழு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் இரவில் மட்டும் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் ஒரு வேளை மட்டுமாவது உணவு உண்ணாமல் சிவபெருமானை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். வாழ்நாள் முழுக்க சோமவார விரதம் இருக்கலாம். குறைந்தது 12 ஆண்டுகள் சோமவார விரதம் இருப்பது சிறப்பு. ஆண்டு முழுவதும் சோமவார விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த ஒரு மாதம் மட்டும் கூடச் செய்து பலனைப் பெறலாம்.

சோமவார விரதம் இருக்க விரும்புகிறவர்கள் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமைகளிலிருந்தும் சோமவார விரதத்தைத் தொடங்கலாம்.

இப்படி சோமவார விரதம் மேற்கொள்வதன் மூலம் ஒருவர் தான் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கலாம். மேலும் முற்பிறவியில் செய்த பாவங்களும் விலகும். நோய்கள் நீங்கும். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.