×

சபரிமலையில்  நவ.16 முதல் மகரவிளக்கு யாத்திரை.. முன்பதிவு அவசியம் என தேவஸம்போர்டு அறிவிப்பு.. 

 

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16ம் தேதி மாலை தொடங்கும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாகவே   மண்டல பூஜை  மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அந்தவகையில் இந்த ஆண்டு, நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல திருவிழா காலம் ஆகும்.  இதற்காக  வரும்  15ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து  நவம்பர் 16ம் தேதி முதல் மகரவிளக்கு யாத்திரை தொடங்குவதால், அன்று முதல்  பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

 டிசம்பர் 27ம் தேதி  மண்டல பூஜை நிறைவடைந்தும்  நடை அடைக்கப்படும்.  தொடர்ந்து மீண்டும்  வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு,   2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன்  நடை அடைக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து  2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.   இந்நிலையில்   மகரவிளக்கு பூஜைக்காக 13 மையங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் ஸ்பாட் புக்கிங் எனப்படும் பதிவு  மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான முன்பதிவு கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில்  சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் 16ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.