×

தலையில் அடிபட்டு மூன்று மணிநேரம் பள்ளியில் கிடந்த மாணவி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் நடந்த விபரீதம்!?

தலையில் அடிபட்டுக் கிடந்த மாணவியைப் பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருச்சி : தலையில் அடிபட்டுக் கிடந்த மாணவியைப் பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருச்சி உறையூரை சேர்ந்தவர் ராம்குமார். பெயின்டர் தொழில் செய்யும் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கௌதம் என்ற மகன் மற்றும் இலக்கியா என்ற மகளும் உள்ளனர். இலக்கியா அங்குள்ள மெதடிஸ் மேல்நிலைப்
 

தலையில் அடிபட்டுக் கிடந்த மாணவியைப்  பள்ளி  நிர்வாகம் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

திருச்சி : தலையில் அடிபட்டுக் கிடந்த மாணவியைப்  பள்ளி  நிர்வாகம் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

திருச்சி  உறையூரை  சேர்ந்தவர் ராம்குமார். பெயின்டர் தொழில் செய்யும் இவருக்கு  சங்கீதா என்ற மனைவியும், கௌதம் என்ற மகன் மற்றும் இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.  இலக்கியா அங்குள்ள மெதடிஸ் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி இலக்கியா பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று மதியம் உணவு இடைவெளியின் போது இலக்கியா மாடியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தலையில் அடிபட்டு ரத்தம் வெள்ளத்தில் கிடந்த இலக்கியாவை சுமார் மூன்று  மணிநேரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வகுப்பறையிலேயே படுக்க வைத்துள்ளனர். இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கூறும்  மாணவியின் தாய் சங்கீதா, ‘மூன்று  மணிநேரத்திற்குப் பிறகு தான் எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. நடந்ததைக் கேட்டால் முறையான பதில் இல்லை. எங்கள் மகள் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக  மருத்துவர்கள் கூறினார்கள். தனியார் மருத்துவமனையில் செலவு செய்யப் பணம் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். ஆனால்  எங்கள் மகள் இறந்து விட்டாள்’ என்றார்.

 

இதைத் தொடர்ந்து இலக்கியாவின் உறவினர்கள் மாணவியின் மரணத்துக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  உறையூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   இதையடுத்து  மாணவி இலக்கியாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.