வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு- ஒருவர் உயிரிழப்பு
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களில் அய்யனார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள T.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அய்யனார் (வயது 26). இவர் நேற்று இரவு அவரது வீட்டில் அவருடைய அண்ணன் முறையான ராஜபாண்டி (வயது 30) என்பவருடன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை 3 மணி அளவில் இருவர் மீதம் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து அவர்கள் வீட்டின் கதவை வெளியே தாளிட்டு சென்றுள்ளனர். தீ பற்றி எரிந்த பொழுது இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து கதவை திறந்து நீரை ஊற்றி தீயை அனைத்து பலத்த காயங்களுடன் காணப்பட்ட இரு இளைஞர்களையும் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து 108 வாகனம் வரவழைக்கப்பட்டு இருவரும் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்பு இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யனார் என்ற இளைஞர் பலியானார். இது குறித்த புகாரில் தென்கரை போலீசார் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.