இன்ஸ்டா காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்த இளைஞர் தற்போது மறுப்பதாகக் குற்றம் சாட்டி, 25 வயதான பெண் ஒருவர் அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாலூர் தாலுக்காவில் உள்ள சிக்கக்கடத்தூரு கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (25) என்ற அந்த பெண், ஹனுமானயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் (24) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். அவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பிருத்விராஜ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்ததாகவும், ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சிவரஞ்சனி குற்றஞ்சாட்டுகிறார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் உறவில் ஈடுபட்டதாகவும் புகார் கூறும் சிவரஞ்சனி, பிருத்விராஜ் தனது கைபேசியை அணைத்துவிட்டு தன்னைவிட்டு விலகியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இதனால் நீதி கோரி, அவர் பிருத்விராஜின் வீட்டின் முன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாலூர் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.