கள்ளக்காதலை துண்டித்ததால் பெண் வெட்டிக் கொலை
திருவேற்காடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டதால் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி(40). இவர் தி நகரில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி(35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் திருவேற்காடு அடுத்த வீரராகவபுரம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளனர். கலைபவானி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த துணிகளை அயர்ன் செய்யும் கடை வைத்திருந்த முருகன்(36), என்பவர் கட்டுமான பணியின் போது உதவியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கலைபவானி வீடு கட்டும் பணிக்கு இவர் பல வகைகளிலும் உதவி செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தி, அந்த வீட்டிற்கு குடிவந்துள்ளனர். அதன் பின்னர் கலைபவானி, முருகனிடம் பேசுவதைக் குறைத்துள்ளார். மேலும் முருகனுடன் இருந்த தொடர்பையும் துண்டித்ததுடன் அவரை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் இது குறித்து அவருடன் சண்டை போட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கலைபவானி வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் சென்று அவரது வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டதும் அவரது மகள் அறைக்குள் சென்று பயத்தில் கதவை சாத்திக் கொண்டார். பின்னர் ஆத்திரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கலைபவானியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதையறிந்த முருகன் அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக் குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது மாடியிலிருந்து தவறி விழுந்து முருகனின் இடுப்பு எலும்பு முறிந்தது. இதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் முருகனை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார், முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த கலைபவானி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு போலீசார் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.