கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள காரணியாணேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பர்வீன் பானு என்ற பெண், தனது கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர், பசு மாடுகளை வளர்த்து பால் தொழில் செய்து குடும்பத்தின் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை கருங்குழிக்காடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவந்த மாடுகளை வீட்டுக்கு அழைத்துவர சென்றிருந்த அவர், இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்களும் கிராம மக்களும் தேடத் தொடங்கினர்.
அவரது இரண்டு மகள்கள், தங்கள் தாய் காணாமல் போனது குறித்து ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கிராம மக்கள், தேடுதலின்போது, உடலை இழுத்துச் சென்றதற்கான கால்தடங்களை கண்மாய் பகுதியில் கண்டறிந்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தபோது, குறித்த பெண்ணின் உடல் மிகவும் மோசமான நிலையில், நிர்வாணமாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள், அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கொடூரமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.