×

`கணவரின் 90வது பிறந்த நாளில் மனைவிக்கு நடந்த சோகம்!’- கண் கலங்கிய குடும்பம்

தனது 90 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மனைவி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர், என். பிளாக்கைச் சேர்ந்த பார்த்தசாரதி (90)- மணிமேகலை (80) தம்பதிக்கு அனந்தபத்மநாபன் என்ற மகனும் சித்ரா, புவனேஸ்வரி என 2 மகள்களும் உள்ளனர். பார்த்தசாரதி, தன்னுடைய மகன் வீட்டில் மனைவியோடு வசித்துவருகிறார். கடந்த 13-ம் தேதி பார்த்தசாரதிக்கு 90-வது பிறந்தநாள். அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்த குடும்பத்தினர், அவரது மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோர்
 

தனது 90 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மனைவி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.


சென்னை அண்ணாநகர், என். பிளாக்கைச் சேர்ந்த பார்த்தசாரதி (90)- மணிமேகலை (80) தம்பதிக்கு அனந்தபத்மநாபன் என்ற மகனும் சித்ரா, புவனேஸ்வரி என 2 மகள்களும் உள்ளனர். பார்த்தசாரதி, தன்னுடைய மகன் வீட்டில் மனைவியோடு வசித்துவருகிறார். கடந்த 13-ம் தேதி பார்த்தசாரதிக்கு 90-வது பிறந்தநாள். அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்த குடும்பத்தினர், அவரது மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழா முடிந்த நிலையில், சமையல் அறைக்குச் சென்றுள்ளார் மணிமேகலை. அப்போது திடீரென கால் வழுக்கி அவர் கீழே விழுந்து மயங்கிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணிமேகலையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிமேகலை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பார்த்தசாரதியின் மகன் அனந்தபத்மநாபன் (49), அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “நான் மேற்கண்ட முகவரியில் என் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என்னுடன் என் தாய், தந்தையும் வசித்து வந்தனர். என் தந்தை பார்த்தசாரதி, ஐசிஎஃப்பில் கிளர்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 90. என் தாயார் மணிமேகலை, தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் செவிலியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 80. இன்று என் தந்தையின் 90-வது பிறந்தநாள். அதற்கு அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். மாலையில் நடந்த பிறந்தநாள் விழாவுக்குப் பிறகு சகோதரிகள் தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

பின் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சமையல் அறைக்கு சென்ற என் தாயார் திடீரென கீழே விழுந்துவிட்டார். என் தாயார் விழுந்த சத்தம் கேட்ட நாங்கள் சென்று பார்த்தோம். பிறகு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். உடனே நாங்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர். என் தாயாரின் சடலத்தை மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர். எனவே, என் தாயாரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மணிமேகலையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து மகனிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்றுக் கொண்டு தகவல் செய்தனர்.

கணவரின் பிறந்த நாளில் மனைவி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.