சித்தப்பா உடன் கள்ளத்தொடர்பு- இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி
பொள்ளாச்சியில் பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (27). இவர் கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (26). மதுரையைச் சேர்ந்த இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில், மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி தேவா வீட்டை விட்டு காணாமல் போனதாக அவரது தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் காணாமல் போனவர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தேவாவின் மனைவியான இந்திராணி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கணவன் மனைவியடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும், அதனால் அவர் வெளியே சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தேவா காணாமல் போனது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வந்து சென்றதற்கான வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் கரூர் பகுதியைச் சேர்ந்தது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் ஆம்புலன்ஸ் குறித்து விசாரணை மேற்கொண்டதும், இந்திராணி தனது கணவர் தேவாவை தான் கொலை செய்ததாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் சரணடைந்து பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்திராணிக்கும் அவரது சித்தி கணவர் (சித்தப்பா முறை)வினோத்குமார் (41).ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் இதுகுறித்து அறிந்த தேவா இந்திராணியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாகவும்,இந்திராணியின் கள்ளக்காதலுக்கு தேவா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய தீர்மானித்து , சம்பவத்தன்று இரவு தனது வீட்டிற்கு கள்ளக்காதலரான சித்தப்பா வினோத்குமார் மற்றும் கரூரிலிருந்து வந்த சில நபர்கள் தேவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தேவாவை கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து கொலை செய்யப்பட்ட தேவாவின் பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலம் 150 கிலோமீட்டருக்கு அப்பால் கரூர் கொண்டு சென்று கரூரில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் யாரும் அறியாத வண்ணம் தேவாவின் உடலை வீசி வந்து விட்டு மீண்டும் எதுவும் தெரியாதது போல் தனது தாயார் வீட்டிற்கு இந்திராணி சென்றுள்ளார். தொடர்ந்து இந்திராணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தேவா காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் இந்திராணியை கைது செய்து கொலைச் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று கொடூர கொலை சம்பவம் குறித்து,தடவியல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள தேவாவின் பிரேதத்தை பரிசோதனை செய்ய கிணத்துக்கடவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள இந்திராணியின் கள்ளக்காதலரான சித்தப்பா வினோத்குமார் உள்ளிட்ட சிலரையும் கிணத்துக்கடவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை முறையில் இருக்கும் நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.