×

ரூ.66 லட்சம் காப்பீடு பணத்திற்காக கணவரை ஆள் வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

 

மதுவுக்கு அடிமையான கணவரை ரவுடி கும்பலுடன் சேர்ந்து கொலை செய்து காப்பீடு பணத்தை பெற்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.


தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தைச் சேர்ந்த ரவி மதுவுக்கு அடிமையானதால் சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது மனைவி பிரசாந்தி தனது கணவர் எப்படியும் இறந்துவிடுவார் என்று பணத்திற்காக ஒரு திட்டம் தீட்டினார். இதற்காக தனது உறவினர் ஸ்ரீனிவாஸின் உதவியுடன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரவியின் பெயரில் ரூ.66 லட்சத்திற்கு காப்பீட்டு பாலிசி எடுத்தார். ஆனால், இறக்கவிருந்த தனது கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதைக் கண்டு, அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இறுதியாக  காப்பீட்டுப் பணத்திற்காக தனது கணவரைக் கொல்ல முடிவு செய்தார். 

இதற்காக உறவினர் ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து பணம் கொடுத்து கூலிப்படையை சேர்ந்த ஜோகி ராஜ்குமார், ஜோகி வெங்கடேஷ் மற்றும் ஜோகி ராம்பாபு ஆகியோருடன் தனது  ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். தனது கணவர் ரவி  கொல்லப்பட்டால் காப்பீட்டுப் பணத்தில் பாதியைக் கொடுப்பதாக  பிரசாந்தி அவர்களிடம் கூறினார். இதற்கு அவர்களும் ஏற்று கொண்டதால் அனைவரின் திட்டத்தின்படி மார்ச் 2 ஆம் தேதி ஸ்ரீனிவாஸ் மது அருந்த ரவியை  அழைத்து சென்று மது அருந்த வைத்து முழு போதைக்கு சென்ற பிறகு  கம்மம் அருகே உள்ள வி.வி. பாலேம்  பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று ரவி ஒரு சாலை விபத்தில் இறந்ததாக  திட்டமிட்டு ரவி மீது கார் மோதி இறந்ததாக சாலை விபத்து போன்று சித்தரிக்க முயன்றனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் முழுமையான விசாரணை நடத்தினர். பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன், இது ஒரு சாலை விபத்து அல்ல, கொலை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்தக் கொலை வழக்கின் முக்கிய மூளையாகக் கருதப்படும் ரவியின் மனைவி பிரசாந்தி மற்றும் ஸ்ரீனிவாஸ் மற்றும் மூன்று கூலிப்படையை சேர்ந்தவர்களை  கைது செய்யப்பட்டு, விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.