×

சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் : நிர்க்கதியாக நின்ற 8 மாத பெண் குழந்தை!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் அங்குள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த ஜெயலக்ஷ்மி என்பவரை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கயல் என்ற 8 மாத குழந்தை உள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில் சரவணகுமாருக்கு மனைவி ஜெயலக்ஷ்மி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே
 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் அங்குள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த ஜெயலக்ஷ்மி என்பவரை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கயல் என்ற 8 மாத குழந்தை உள்ளது.

இவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில் சரவணகுமாருக்கு மனைவி ஜெயலக்ஷ்மி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 25 ஆம் தேதி கணவன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னையில் நீ இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சரவணகுமார் ஜெயலக்ஷ்மியிடம் கூறியுள்ளார். இதனால் ஜெயலக்ஷ்மி அருகில் உள்ள தாய் வீட்டிற்கு தனது குழந்தையுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மதியம் சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டுக்கு சென்ற சரவணகுமார் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் இறந்த ஜெயலக்ஷ்மி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கியிருந்த சரவணகுமாரையும் கைது செய்தனர்.

இதனிடையே ஆதரவில்லாமல் தவித்த 8 மாத குழந்தையான கயல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த நிலையில் அவரை ஜெயலக்ஷ்மியின் தாய் வாங்க மறுத்துவிட்டார். என் மகளே சென்ற பிறகு இந்த குழந்தை எதற்கு? என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது தவித்த நிலையில் ஜெயலக்ஷ்மியின் தங்கை கயலுக்கு உண்ண உணவு கொடுத்தும் அவள் உணவை உட்கொள்ளாமல் தனது தாய் ஜெயலக்ஷ்மியை கண்ணீருடன் அழுது தேடியது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் இதையெல்லாம் கண்டு மனம் மாறாத கயலின் பாட்டி அவளை கடைசிவரை ஏற்கமாட்டோம் என்று உறுதியாக இருந்ததால் சரவணகுமாரின் குடும்பத்தினரிடம் 8 மாத குழந்தையான கயலை ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.