கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவி
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு தடையாக உள்ள கணவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததால் ரூ 5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார்.
இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர்.
இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.