×

2 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை... 20 நாட்களுக்கு பின் காட்டில் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்பு

 

செக்காணூரணி அருகே 2 வயது பெண் குழந்தையை தந்தையே, கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசி சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள சொரிக்கான்பட்டியில் திருப்பரங்குன்றத்தைச்சேர்ந்த சந்திரன் என்பவரது கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன், கேரளா புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு திருமணம் செய்து அவரது 2 வயது குழந்தையுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அறியாத வயதில் தற்போதைய தந்தையிடம் பழக துவங்கிய பெண் குழந்தை சிவானியை தொந்தரவாக நினைத்த கண்ணன், இக்குழந்தை தொந்தரவாக இருப்பதாக அடிக்கடி கண்ணன் கூறி வந்ததாகவும், கடந்த 20 நாட்களுக்கு முன் குழந்தை சிவானியை, தாய் கலாசூர்யா கடைக்கு சென்றிருந்த போது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த கலாசூர்யாவும், கண்ணனுடன் சேர்ந்து குழந்தையை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற கலாசூர்யாவிடம் குழந்தை குறித்து உறவினர்கள் கேட்ட போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கலாசூர்யாவின் தாய் சந்தியா கேரள மாநிலம் புனலூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கேரளா போலீசார் மற்றும் செக்காணூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண் குழந்தையை கொன்று வீசியதை கண்ணன் மற்றும் கலா ஒப்புக்கொண்டனர். அதன்படி காட்டு பகுதியில் எலும்பு துண்டுகளாக கிடந்த குழந்தையின் தடயங்களை சேகரித்து கண்ணன் - கலாசூர்யா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார். தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலா சூர்யாவிற்கு கண்ணன் மூன்றாவது கணவர் என்பதும், இரண்டாவது கணவர் அச்சு என்பவருக்கு பிறந்த குழந்தை சிவானி என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண் குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசப்பட்டதும், 20 நாட்களுக்கு பின் எலும்பு துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.