பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்- 14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை
கர்நாடகாவில் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி முஸ்கான். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு வயது மகள் உள்ளார். இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் இம்ரான் மனமுடைந்திருந்தார். இதனால் இரண்டாவதாக பிறந்த குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு, அவரது குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, இம்ரான் குழந்தையை நிலத்தடி நீர் தொட்டியில் வீசியுள்ளார். குழந்தையைக் காணாததால் அவரது மனைவி பதற்றமடைந்தார்.மேலும் குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். அவர்களுடன் சேர்ந்து தேடுவதுபோல் நாடகமாடிய இம்ரான் தண்ணீர் தொட்டியில் குழந்தையைக் கண்டதாகக் கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் குழந்தை இறந்துவிட்டது. மாவட்ட மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறை குடும்பத்தினரிடம் விசாரித்தபோது இம்ரான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.