“அப்பாதான் அம்மாவை கொன்றார்; நான் அதை நேரில் பார்த்தேன்”- போலீசிடம் கூறிய சிறுவன்
உத்தரப்பிரதேசத்தில் குடும்ப தகராறில் 8 மாதம் கர்ப்பமாக இருந்த மனைவி மனிஷாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் ஹனிஃப், அவரது மகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவை சேர்ந்தவர் ஹனிஃப். இவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 5 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மனிஷா மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இந்நிலையில் ஹனிஃப் மது மற்றும் சூதாட்டத்திற்கு கடுமையாக அடிமையாகியிருந்தார். மேலும் தனது போதைப் பழக்கங்களால், தனது சொத்தின் பெரும்பகுதியை விற்றுவிட்டார்.
இந்நிலையில் குடித்துவிட்டு தகராறு செய்த ஹனிஃப், வாக்குவாதத்தில் மனிஷாவை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தை அவர்களுடைய 5 வயது மகனும், 2 வயது மகளும் பார்த்தனர். சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, ஹனிஃப் சம்பவ இடத்திற்கு காவல்துறையினரை வரவழைத்து, ஒரு பொய்க் கதையை உருவாக்க முயன்றார். இருப்பினும், மன அதிர்ச்சிக்கு உள்ளான அவரது ஐந்து வயது மகன், காவல்துறையினரிடம், “அப்பாதான் அம்மாவை கொன்றார்; நான் அதை நேரில் பார்த்தேன்” எனக் கூறினார். இதனையடுத்து ஹனிஃப்பை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மனிஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.